Tuesday, October 19, 2010

மனித உரிமையின் வளர்ச்சி -2

4 comments
மனித உரிமைகள் பற்றிய வரலாற்று ரீதியான போக்கை இந்த பதிவில் பர்த்துவருகின்றோம். அந்த வகையில் கடந்த பதிவில் மனித உரிமைகளின் ஆரம்பநிலை  ஆகிய மக்னா காட்டா உடன்படிக்கை பற்றி பார்த்தோம்.

மக்னா காட்டா அமுலாக்கப்பட்ட 1215 - 1689 வரை மனித உரிமைகளை பாதுகாத்து சிறந்த ஒரு நிர்வாகம் நடைபெற்றது என்று கூறமுடியாது. ஏனேனில் இக் காலப்பகுதிலேயே 14 ம் ஹென்றி மன்னன் பல்லாயிரக்கணக்கான மக்களை கைது செய்து கொன்று குவித்தான். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் இக் காலப்பகுதியில் நடைபெற்றது.

இந்தவகையில் 1611 இல் நீதவான் குக் அவர்கள் " ஒரு மன்னனுக்கு மரபு வழி வந்த உரிமைகள் எதுவும் இல்லை. சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டே  மன்னன் செயற்படவேண்டும்". என்று பிரகடனம் செய்தார். 1689 ம் பிரத்தானிய உரிமை பிரகடனம் இந்தவகையிலேயே வெளியிடபட்டது. இதன் காரணமாக மன்னன் சட்டத்திற்கு உட்பட்டே தனது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது.


அமெரிக்க சுகந்திர போராட்டத்திற்கு, மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகளும் சுகந்திரங்களும் என்ற எண்ணக்கருவே வித்திட்டது. இந்தவகையில் ஐக்கிய அமெரிக்க என்ற புதிய அரசாங்கத்தை நிறுவி, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி  ஜோர்ச் வோசிங்டன் கீழ் அமெரிக்க தீர்மானங்கள் என்ற பெயரில் 1776 ஜூன் 12  வேர்ஜினியாவில் வெளியிடப்பட்ட பிரகடனம் மனித உரிமைகள் தொடர்பான அபிவிருத்தியில் முக்கியமானதொரு மையில் கல்லாகும்இதன்  முதலாவது அத்தியாயத்தில், ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே சுகந்திரமானவன்.அதனை பிரிக்க மற்றும் மறுக்கவும் முடியாது. மனிதன் சமுதாயத்துள்  புகுந்தவுடனையே அவனுக்கு உரிமை கிடைகின்றது.எந்த சந்தர்பத்திலும் அவனது உரிமைகளை பறிக்க முடியாது. குறைக்க முடியாது. அவையாவன ,

        வாழ்க்கையையும் சுகந்திரத்தையும் அனுபவிக்கும் உரிமை.
        ஆதனத்தை உரிமைகொள்ளும் உரிமை.
        சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமை.

இரண்டாவது அத்தியாயத்தில்,
 அரசுக்கிருக்கும் அனைத்து அதிகாரமும் மக்களிடம் மிருந்தே கிடைக்க பெறுகின்றது.நீதவான்கள் மக்களின் பாதுகாவலர்கள். அவர்கள் எப்போதும் மக்களுக்கு சேவை  செய்ய கட்டுப்பட்டவர்கள்.

மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு.தகாத நிர்வாக முறைமையின் கீழ் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க, அவசியமான நடவடிக்கைகள் அரசினால் மேட்கொள்ளபடவேண்டும்.

இந்தவகையில் மனிதஉரிமைகள் மட்டுமன்றி அரசின் பொறுப்பும் செயற்பாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் எடுத்துகட்டப்படுகின்றது.
மீண்டும் சந்திப்போம்.........

Saturday, October 16, 2010

தெய்வீகக்கோட்பாடு ........மக்கியவல்லியும் மனித உரிமை வளர்ச்சியும்

0 comments
அரசின் தோற்றம்  பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. அதில் தெய்வீகக்கோட்பாடு   என்பது மிகவும் முக்கியமானதும் பழமையானதும் கூட.இன்று இக் கோட்பாடு கேலிக்குரியதாக இருப்பினும், இன்றும் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இக் கோட்பாட்டின் செல்வாக்கை காணக்கூடியதாக உள்ளது.


இக் கோட்பாட்டின் படி அரசு என்பது இறைவனின் படைப்பு என்றும், அவ் அரசில் மேற்கொள்ளபடும் ஆட்சி இறைவனால் மேற்கொள்ளபடுகின்றது என்றும், ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதி என்றும், அவர்கள் இறைவனிடமிருந்து அதிகாரத்தை பெற்று ஆட்சி செய்கின்றார்கள் என்றும், அவ் ஆட்சிக்கு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும், கட்டுப்பட மறுப்பது என்பது இறைவனுக்கு எதிராக  செய்யப்படும் யுத்தத்திற்கு ஒப்பானது என்றும், இக் கோட்பாடு வலியுறுத்துகிறது.மத நம்பிக்கைகள் வேரூன்றி காணப்படும் அக் காலத்தில் இக் கோட்பாடு மிகுந்த வரவேற்பை பெற்றது.இக் கோட்பாட்டின் எழுர்ச்சிக்கு கிறிஸ்தவ மதத்தின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது.ரோமானிய காலத்தில் எழுச்சி பெற்ற கத்தோலிக்க திருச்சபையும், பாப்பரசர் என்ற மதத் தலைமைத்துவமும் இக் கோட்பாட்டை பெரிதும் வலியுரித்தியது. இதன் காரணமாக பாப்பரசர்கள் அரசிய அதிகாரத்தில் மிகுந்த செல்வாக்கை பெற்றனர்.


பாப்பரசர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அதிகாரத்தை பெறுகின்றார்கள் என்றும், அவர்களிடமிருந்தே மன்னர்கள் அதிகாரத்தை  பெறுகின்றமையால் மன்னர்களை விட பாப்பரசர்களும் திருச்சபையுமே அதிகாரம் கூடியது என்ற வகையில் பிற்காலத்தில்  மன்னர்களுக்கும் திருச்சபைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது.

இறைவனிடமிருந்தே அதிகாரம் பெறப்படுகின்றது என்று மக்கள் நம்பியமையால், ஆட்சியாளர்கள் இக் கோட்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் "மன்னனின் கட்டளைகளை மக்கள் இறைவனின் கட்டளைகளாக ஏற்று நடக்க வேண்டும் என்றும், அவ் ஆட்சி சர்வதிகாரமாக இருந்தாலும் மக்கள் கட்டுப்படவேண்டும்".இவ்வாறாக ஆட்சியாளர்கள் இதனை பயன் படுத்தி சர்வதிகாரமாக நடந்து கொண்டனர். 

நம்பிக்கையின் அடிப்படையில் அரசு மற்றும் அதன் தோற்றம் பற்றி விளக்கும் இக் கோட்பாடு காலவோட்டத்தில் தனது செல்வாக்கை இழக்க தொடங்கியது. அரசு என்பது மத சார்பற்ற நிறுவனம் என்றும்  அரசியலில் மதத்தின் தலையிட்டை கண்டிக்கும் "மக்கியவல்லியின்" சிந்தனை வலுப்பெற தொடங்கியதில் லிருந்து இதன் முக்கியத்துவம் குறையத்தொடங்கியது.

இன்றும் கூட மத்தத்தின் செல்வாக்கை சில நாடுகளை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை அரசியல் யாப்பிலேயே பௌத்த மதம் அரச மதம் என்றும், அதனை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவருடைய  கடமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏனைய மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை காணலாம். அடுத்து இந்தியா மத சார்பற்ற நாடு என்று குறிப்பிட்ட போதிலும் அங்கு இந்து மதத்திற்கே முக்கியத்துவம்  வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்  இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாம் மதத்திற்கே முக்கியத்துவம் வழங்க படுகின்றது.

இன்று அனேக நாடுகளில் நடைபெறும் யுத்தங்கள் கூட மதத்தை அடிப்படையாக கொண்டே நடைபெறுகின்றது.எது எப்படியோ அரசு என்பது மத சார்பற்றதாக  இருக்கும்  போதே அங்கு ஆட்சியானது சிறப்பாக நடைபெறும்.

இதுவும் ஆயுத பூஜை தான் .....

28 comments
இன்று ஒவ்வொரு தனி மனித உழைப்புக்கும் காரணமான வயிற்றுப்பிழைப்பு நாள் . அது தான் ஐ நாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவு தினம் இன்று .  ஆனால் எம் கண்களுக்கு தெரிவது நாம் முக்கியத்துவம் கொடுப்பது எந்தவித பயனுமற்ற ஒரு விழா ஆயுத பூஜை .

இதுவும் ஆயுத பூஜை தான் .ஆனால் சாவிக்கொத்துகளை அடுக்கி மிதமிஞ்சிய உணவினால் நடைபெறும் பூஜை அல்ல .. உணவு இல்லாததால் ஆயுதத்தின் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்யும் முறை . இது வேறு எங்குமில்ல ..நம் ஆசியா , இந்தியாவில் தான் .Mirgitand எனும் இந்திய கிராமத்தில் பசியை போக்குவதற்காக இரும்பு ஆயுதத்தால் வயிற்றில் சூடு வைக்கும் முறை . இன்னமும் தொடர்கிறது  ........


இந்தியாவில் மட்டும் மொத்தமாக இரண்டு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் இறக்கின்றனர் . ஒரு நாளைக்கு 6 ,000  சிறுவர்கள் வீதம் . 
அதுவும் இந்தியாவில் மட்டும் 43 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் . சீனாவில் வெறும் ஏழு சதவீதமே .... உலகத்தில் முதலாவது இடத்தில் இந்தியா...


கார்டியன் பத்திரிக்கை ஆசிரியர் குழாம்  சென்ற போது அவர்களுக்கு கிராமத்தவர்கள் கூறியது  "இவ்வாறு வயிறு பெருத்து வந்தால் வாழை இலை  வைத்து சூடு போடுவோம் , வழியால் கத்தினால் கிருமிகள் இறக்கின்றன என்று அர்த்தம் " ஆனால் இந்த முறைகள் கிருமி தொற்று ஏற்ப்பட்டு அந்த கிராமத்தில் பல சிறுவர்கள் இறந்துவிட்டனர் .
ஆசியா மிகப்பெரும் சவாலை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரும் . காரணம் அறிவின்மை ,விழிப்புணர்வு இன்மை ,அரசின் திட்டமில்லாத நடவடிக்கை போன்றன .
அண்மையில் கூட  இந்தியாவில் 67 ,௦௦௦ தொன் தானியங்கள் பழுதடைந்தன  . இதனால் மாதத்திற்கு 190 ,௦௦௦ பேருக்கு உணவு வழங்கலாம் என உயர்நீதிமன்றத்தால் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது .


பட்டினியால் 13 .5 மில்லியன் சிறுவர்களும் கல்வியை இழக்க வேண்டி நேர்ந்துள்ளது  . சிறுவர் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பதை விட அவர்கள் உருவாகும் இடத்தை தடுப்பது எவளவோ மேலானது .


நாம் சற்று சிந்திக்கவும் வெட்கம் கொள்ளவும் வேண்டிய நிலை ................. இல்லாவிட்டால் மேலே உள்ள ஆயுதத்திற்கான ஆயுத பூஜை பதிவு போலவும் எடுத்துக்கொள்ளலாம் ....


படங்கள்,தகவல்,புள்ளி விபரம்  நன்றி - இணையம் 


மறக்காமல் வாக்களியுங்கள் .. அனைவரையும் சென்றடைய ...

Thursday, October 14, 2010

மனித உரிமையின் வளர்ச்சி -சாதி - பிராமணர்கள் - கடவுள் 1

0 comments
ஆதி காலத்தில்லிருந்தே  சமூக நீதி தொடர்பான எதிர்பார்ப்பு மனிதர்களிடையே இருந்துவந்துள்ளது. மனிதனை ஒரு ஒழுங்கு நெறிக்குள் கொண்டு வர வேண்டும் என்று சம்பிரதாயங்களை உருவாக்கிய அறிஞர்கள், சாதி பாகுபாட்டை கொண்டுவந்தமையால் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது.

 இதனால் உயர்தோர் தாழ்ந்தோரை அடக்கியாளும் நிலை ஏற்பட்டது.  இச் சாதிப் பாகுபாடனது கடவுள் அருளினால் நிகழும் செயல் ஆகையால் இறைவனின் தீர்மானத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதில் மதவாதிகள் வெற்றி கண்டனர். இந்து மதத்தின் தோற்றத்தை சிக்கலாக்கிய பண்டைய பிராமணர்கள் சமூகத்தின் அனைத்து வரப்பிரசதங்களையும் தனதாக்கி கொள்ள சாதி பாகுபாட்டை ஏற்படுத்தி கொண்டனர்.


இன்றுவரை எவ்வளவு தான் சமூகம் முன்னேறினாலும் சாதி பாகுபாட்டை மனிதன் இன்னும் விட்டபாடில்லை.

சாதி பாகுபாட்டை விட மனித மான்பு மிகவும் மோசமாக பதிக்கப்பட்ட நிலையை நாம் ஆரம்ப காலத்தில் காணலாம்.அதாவது மனிதர்கள் மிகவும் கிழ்த்தரமான முறையில் அடிமைகளாக பாவிக்கப்பட்டனர்.உரோம சாம்ராச்சியம் நிறுவப்பட்ட காலப்பகுதியில் மனிதர்களில் ஒரு பகுதியினர் அடிமைகளாக விலங்கு மாட்டப்பட்டு,அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு விலங்குகள் போல் நடத்தப்பட்டனர்.


மேலும் அடிமை வியாபாரமானது 1600 /1700 ஆண்டளவில் ஐரோப்பியர்கள் வட அமரிக்காவில் குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன் அபிவிருத்திக்கு என ஆபிரிக்காவில் சுகந்திரமாக திரிந்த கறுப்பினத்தவர்களை விலங்குகளைப்போல் பிடித்து கப்பலில் ஏற்றி அனுப்பி,அவர்களை  ஏலத்தில் அடிமைகளாக்கினர்.


இவ்வாறாக நீண்ட கால புரட்சியின் பின்னர் அடிமைதனத்திலிருந்து விடுபட அடிமைகள் மட்டுமன்றி,சாதாரண மக்களும், புத்திஜீவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தவகையில் இது  மனித உரிமைகளை பெற்றெடுக்க நடந்த போராட்டங்களில் ஒரு முக்கியமான மையில் கல்லாகும். மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் பிரித்தானியர்கள் முக்கியமானவர்கள்.


பாரம்பரிய மன்னராட்சி உடைய அத்தகைய நாட்டில், மன்னராட்சி அமைப்பை பாதுகாக்கும் அதேவேளை மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மன்னராட்சியில் சில மாற்றங்களை  கொண்டு வந்தனர்.


இந்த வகையில் 1215  மக்னா காட்ட உடன்படிக்கையின் மூலம் மன்னருக்கு இருந்த பலத்தை குறைத்து பாராளுமன்றத்தின்  பலம் ஓரளவு கூட்டப்பட்டது.

"மக்னா காட்டவின்"  39 ஆம் பிரிவு, எந்தவொரு மனிதனையும் கைதுசெய்வதற்கான, காணமல் போகச்செய்வதட்கான, சித்திரவதை  செய்வதற்கான பலம் ஆட்சியாளருக்கு இல்லை.என்று கூறுகிறது. இந்தவகையில் இன்று பெரிதும் பேசப்படுகின்ற மனித உரிமைகள் தொடர்பான அடிப்படையை  "மக்னா காட்டவில்" காணக்கூடியதாக உள்ளது.


மீண்டும் அடுத்த பதிவில் சந்த்திப்போம்......

Wednesday, October 6, 2010

அரசின் தோற்றமும் மனித உரிமையின் வரலாறும்..

6 comments
அரசு தோன்றுவதற்கு முன் எவ்வாறு மனித சமுதாயம் இருந்தது என்பதை கடந்த பதிவில் பார்த்தோம்

உயிர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் எதுவுமில்லாமை என்பது பிரதான பிரச்சனையாக அக் காலத்தில் காணப்பட்டது. இதனால் மனிதர்களும் விலங்குகளும் அச்சத்துடனே வாழ  வேண்டிய  சூழ்நிலை இருந்தது .கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும் , அச்சமற்றவர்களாகவும் இருந்தபோதிலும் , எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துகொள்ளக்கூடிய தன்மை அத் தலைமைத்துவத்துக்கு இருக்கவில்லை.


உயிர் மட்டும்மல்லாது தம்முடைய ஆதனத்தை பிறர் தலையீடு இன்றி அனுபவிக்க கூடிய சூழ்நிலையும் அக் காலத்தில் காணப்படவில்லை. ஏனேனில் பலம் வாய்ந்தவர்கள் தமது சொத்துக்களை கைப்பற்றக்கூடிய நிலைமை இருந்தமையால், சொத்துக்கள் தொடர்பாக நிச்சயமற்ற தன்மை காணப்பட்டது.

தாம் விரும்பிய வாழ்கையை வாழ்வதற்கு சுகந்திரம் இருக்கவில்லை. ஏனேனில் தமது தலைவனின் சர்வதிகார ஆட்சிக்கு அடிபணிந்து வாழவேன்டியமையால் சுகந்திரம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

இவ்வாறு அடிமைத்தனம் மட்டுமல்லாமல் கொடூரமான சித்திரவதைக்கும் ஆளாகவேண்டிய  நிலமையும் காணப்பட்டது. மேலும் நியாயமான வழக்கு விசாரணையில் தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கக்கூடிய நிலை இருக்கவில்லை.மேலும் ஒரு மனிதன் என்றவகையில் தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை பாதுகாத்து கொள்வதற்கும் வழிகள் இருக்கவில்லை.

இவற்றை நோக்கும் போது மனித சமுதாயத்துக்கும் மிருகங்களுக்கும் இடையே பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை.இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே  அரசு என்ற அமைப்பு தோன்றுவதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டது.

அரசின் தோற்றம் பற்றிய கருத்துக்கள்

'தோமஸ் ஹோப்ஸ்' கருத்துப்படி அரசனுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையின் மூலமாக அரசனுக்கு மக்களை ஆட்சி செய்வதற்கு அவசியமான அதிகாரம் கிடைத்த போதிலும் அது பற்றி கேள்வி எழுப்ப மக்களுக்கு உரிமை இருக்கவில்லை. ஆனால் ஜான் லோகினுடைய கருத்துப்படி அரசன் மக்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டு இருந்தான்.அரசின் தோற்றம் பற்றிய இவர்களுடைய கருத்துகள் என்பது முக்கியமாக காணப்படுகின்றது.


அரசின்  தோற்றம் பற்றிய தர்க்க ரீதியான கருத்துக்களை முன் வைத்தவர்கள், சமுகத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் மூலமே அரசு தோற்றம் பெற்றது என்கின்றனர். இதுவே ஏற்றுகொள்ள பட்ட கருத்தும்.

அரசை உருவாக்கிய பின்னரும் மனித சமுதாயத்தில் எதிர்பார்த்த சுமுகநிலை ஏற்பட்டது என கூறமுடியாது.சிறந்த ஒருவன் அரசனாக நியமிக்கப்பட்ட போது, சிறந்த நிர்வாகம் கிடைத்த போதிலும்,சர்வதிகரன் ஒருவன் அரசனாக நியமிக்கப்படும் விடத்து  அனைத்தும் மாற்றமடைந்தது. வாய் மூலம் பிறப்பிக்கும் கட்டளைகள் அமுலக்கபட்டது. அச் சட்டத்தின் நன்மை தீமை பற்றி சிந்திக்க மக்களுக்கு வாய்பளிக்கவில்லை.இந்தவகையில் அரசாட்சி என்பது அரசனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே நடை பெற்றது.இதிலிருந்து விடுபட மக்களுக்கு வழி இருக்கவில்லை.

அரச அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் சொத்துக்களை அழித்தல்,அல்லது சொத்துக்களை அபகரித்தல்,நியாயமான காரணமின்றி கைது செய்தல், அல்லது சித்தரவதை செய்தல்,நியாயமான வழக்கு விசாரணை நடத்தாமை,சுகந்திரமாக தமது வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்காமை, தனியாள் சுகந்திரம் மதிக்க படாமை போன்ற பல்வேறு காரணிகள் மனித உரிமையை இனம் காண மனிதனை தூண்டிய வரலாற்று ரீதியான காரணிகள் ஆகும்.ஏன் இன்றும் கூட மேற்கூறிய  நிலைமைகளை காணக்கூடியதாக உள்ளது.

Sunday, August 22, 2010

இலங்கையும், உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையும்

0 comments
இன்றைய உலகில் வாழ்கின்ற அனைவரிடமே ஏனையவர்களிடத்தே   கூறமுடியாத அல்லது கூறவிரும்பாத பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றது . ஏன் நீங்கள் கூட  அவ்வாறான  பல விடயங்களை உங்கள் மனதில் போட்டு புதைத்துள்ளிர்கள் தானே?
அவ்வாறான ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் விடயங்களை வெளியே கொண்டுவருவதற்காக சிக்மன் ப்றோயிட் என்ற உளவியரலால் முன்வைக்கப்பட்டதே  உளப்பகுப்பாய்வு கொள்கை ஆகும்.


உளப்பகுப்பாய்வு என்பது மனிதனின் ஆழ்மனதிலே பதியப்பட்ட விடயங்கள் மனித நடைத்தையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பரிசீலிக்கும் முறையாகும். இதன் படி இம்முறையானது மனித நடத்தையிலும் ஆளுமையிலும் மறைவான மூல இடங்களை ஆராய்கின்றது.
இந்த உளப்பகுப்பாய்வின் முலம் மனிதனின் ஆழ்மனதில் உள்ள விடயங்களை கண்டு பிடிக்கவும்,உளவியல் ரீதியாக  பதிக்கப்பட்ட ஒருவரை  மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வரவும் முடியும்.

கூடுதலாக  எம்முடைய ஆழ்மனத்தில் நிறைவேறாத பாலியல் ஆசைகள்,பயம்,அறிவுபூர்வமற்ற  விருப்புகள்,வன்முறை,ஒழுங்கீனமான நடத்தை தூண்டல்கள்,சுயநல தேவைகள்,வெட்கப்படக்கூடிய அனுபவங்கள் போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறான உணர்ச்சிகளை இலங்கையர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
இதற்கு காரணம் கலாசாரம், பண்பாடு, மதவிடயங்கள், காரணமாக இலங்கையர்கள் ஓர் வரையறைக்கு உட்பட்டு வாழ்கின்றனர்,மனநோயினை ஒரு மனநோய் தான் என்று ஏற்றுக்கொள்ள இலங்கை சமூகத்தினர் முன்வராமை,
உளவியலாளர்கள் தொடர்பான நம்பிக்கையின்மை,மருந்துகள் மூலமே நோய்களை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கம். 

உதாரணமாக துஷ்பிரயோகத்துக்கு உட்பட்ட சிறுவனோ சிறுமியோ தான் அதன் காரணமாக மன உளைச்சலுக்கு உட்படுகின்றோம் என்பதை சமூகம் அறிவதனை விரும்புவதில்லை.மேலும் அவர்களுடைய பெற்றோர்கள் அதனை வெளியே கூற அனுமதிப்பதும்மில்லை.இதற்கு காரணம் இலங்கை சமுகத்தவர்களிடையே காணப்படும் கலாசார பண்பாட்டு அம்சங்களாகும்.அத்தோடு பாதிக்கப்பட்டவரின் குடும்ப சூழ்நிலை,சுழல், மற்றும் தாம் தவறானவர்கள் என்று சமுகத்தில் முத்திரை குத்தப்படுவோம் என்ற பயம் காரணமாக தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.
இதன் காரணமாக குறித்த சிறுவனோ சிறுமியோ மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.இவ்வாறு தம்மை வெளிபடுத்த பல தடைகள் இருப்பதால் இவ் உளப்பகுபாய்வு என்ற சிகிச்சை முறையானது  இலங்கை சமுகத்துக்கு பொருந்துவதில்லை.

அடுத்து இலங்கை சமுகத்தவர்களிடையே மன நோய் தொடர்பாக தெளிவு மற்றும் அறிவு காணப்படுவதில்லை.மேலும் அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டால் தமக்கு பேய் பிடித்து இருப்பதாக கருதி பேய்ஆட்டுதல்,மந்திருத்தல்,தாயம் கட்டுதல் போன்ற மூடநம்பிக்கைகளை நாடுகின்றனரே ஒழிய அதற்கேற்ற உளவியல் சிகிச்சை முறைகளை நாடுவதில்லை.

மேலும் இலங்கை சமுகத்தை பொறுத்தவரை பாலியல் என்பது அருவருக்கதக்கதவவும் அது பற்றி வெளிப்படையான கருத்து  என்பது காணப்படுவதில்லை. உதாரணமாக இலங்கை சமூகத்தினரிடையே ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இருக்கின்ற போதும் அவர்கள் தமது ஆசைகளை மனதில் அடக்கி கொண்டு சாதாரண திருமண வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.இதனால் இவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர்.

அதுபோன்று இலங்கை மக்களின் குடும்ப வாழ்க்கையிலும் பல்வேறு முரண்பாடுகளும் பிரச்சனைகளும் நிலவுகின்றன.எனினும் அதிகமாக பெண்கள் அதனை வெளிபடுத்த விரும்புவதில்லை.அவர்கள் தமது கணவர்மார்களால் ஏற்படும் கசப்பான விடயங்களை வெளியே கூறாமல் தமது  மனதில் போட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் உள நோய்க்கு உட்பட்ட ஒருவரை எமது சமூகம் நோக்கும் பார்வை  சம்பந்தபட்டவரையும் அவரது குடும்பத்தையும் பாதிப்பதாக உள்ளது.இங்கு உள  நோய்க்கு உட்பட்டவர் மட்டுமல்லாது அவரது குடும்பமும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றது.அத்தோடு சமூகத்தால் தாம் கேலி செய்யப்படுவோம் என்ற பயத்தின் காரணத்தாலே பெரும்பாலும்  அவர்கள் தம்மை வெளிபடுத்த விரும்புவதில்லை.

மேலத்தேய நாடுகளை  பொறுத்தவரை இம் சிகிச்சை முறையானது பிரபலமாக உள்ளது.காரணம் அவர்களின் சமூக கட்டமைப்பு. ஆனால் வளர்முக நாடுகளை பொறுத்த வரை அவ்வாறல்ல. எனவே எமது சமூகட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவரும் பட்சத்தில் இவ்வாறான சிகிச்சை முறைகள் மூலம் உளநோய்க்கு உட்பட்டவரை இலகுவாக குணப்படுத்த முடியும்.

Tuesday, August 17, 2010

மனித உரிமைகளின் வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சி

0 comments
மனித  உரிமைகள் என்ற எண்ணக்கரு நவீன உலகத்தில் தீடிரென தோன்றியது அல்ல .
மனித வரலாற்றில் அது படிப்படியாக தோன்றி நியாயத்தை குறிக்கோளாகக் கொண்டு நாகரிகமடைந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் மனித உரிமைகள் பற்றிய அமைப்புகளால் மேற்கொள்ளபட்ட  பாரிய முயற்சியாக இது காணப்படுகிறது .


 மனித சமுதாயத்தின் ஆரம்பமும் , மனித உரிமைகள் தொடர்பாக வரலாற்றுக்கு முந்திய காலத்தில் நிலவிய நிலைப்பாடும் .


வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது எழுத்திலோ அல்லது தொல்பொருள்சான்றுகள் மூலமோ  உறுதிபடுத்த முடியாத காலமாகும் .

அக்  காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குழுக்களாக காடுகளில் வாழ்ந்து விலங்குகளை வேட்டையாடி இடத்துக்கு இடம் அலைந்து சென்றனர்.இவ்வாறு இவர்கள் செல்லும்போது எதிர்படும் எதிரிகள் அல்லது வேற்றுகுலத்தவர்களை தாக்கி வந்தனர் .இதில் இறப்பவர்களின் சடலங்களை வெற்றிபெற்றவர்கள் மாமிசமாக உணவுக்காக பயன்படுத்தினர் .காயமடைந்தவர்களின் உடல்களை மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் உணவுக்கென பாதுகாத்து வைத்திருந்தனர் .காயமடையாதோரை மரத்தில் கட்டி வைத்து சில நாட்களுக்கு பின்னர் கொன்று உணவாக உட்கொண்டனர் .இதிலிருந்து அக் கால மனித சமுதாயம் எவ்வளவு கொடூரமானது என்பது தெளிவாகிறது(இந்தக்காலத்தை போலவே!!!)  .

இத்தகைய மனித சமுதாயத்தில் ஏற்பட்ட கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாத கட்டத்தில் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாக அரசு காணப்படுகிறது .

இதில் நான் கூறுவது என்னவென்றால் மனித சமுதாயத்தில் நிலவிய அத்தகைய பயங்கரத்தின் மத்தியிலும் மனிதன் மனித உரிமைகளை தேடுவதற்கு முயற்சித்துள்ளான்.

அக் காலத்தில் அந் நாகரீகம் அடையாத மனிதர்களால் எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளால்  தான்  தற்கால மனிதன்  உயிரை பாதுகாத்துக்கொள்வதற்கும்    சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் வழிகோலப்பட்டது   என்றால் நம்பமுடிகிறதா ?

மனித மாமிசம்  உண்பது தவிர்க்கப்படவேண்டும் என்று மனிதசமுதாயம் முடிவெடுத்தது வரலாற்றுக்கு  முந்தியது .வரலாற்றுக்கு  முந்திய காலத்தில்  தொடக்கப்பட்ட மற்றுமொரு  சம்பிராதயம் ஆடை அணிவதாகும் .இன்று இது மனிதனுடைய கௌரவத்துக்கு காரணமாக அமைகிறது .


 மனித மாமிசம் உண்ணும் வழக்கம் இன்னும் இருக்குமானால் இன்றையகாலகட்டத்தில் உங்களுக்கும் எனக்கும் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா ?மிகவும் அற்பமான தேவையற்ற விடயங்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில்  நாம் ஒருவர் ஒருவரின் உயிரை பறிக்கும் நிலையில் ,பசியை போக்குவதற்கு  மனித மாமிசத்தின் பொருட்டு உயிர்களை பறிக்கின்ற நிலையை இன்று காணமுடியுமா? (மீண்டும் பழைய நிலைக்கு செல்வது போலவே இன்றைய சூழல் உணர்த்துகிறது !! ) 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது எமது தற்பாதுகாபிற்க்காக உரிமைகளை பாதுகாப்பதற்கான சமூக மரபுகள் ஆரம்பிக்கப்பட்டன .ஆகையால் சம்பிரதாயம்
 வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே  ஆரம்பிக்கபட்டிருக்கவேண்டும்.ஆடை அணியும்  சம்பிரதாயம் ஆரம்பிக்கபட்டதன் விளைவாக இன்று நாம்  சமுகத்தில் மனத்தோடும் மரியதயகவும் வாழ முடிகிறது .

மனிதன் ஒரு சமூக பிராணி .அவனால்  தனித்து வாழ முடியாது .அவன் சமுகமவே வாழுகிறான் .சமுகம்  வளர வளர பிரச்சனைகளும் அதிகரிக்கின்றது.இதனால் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏற்படுகிறது .மனித வரலாற்று முழுவதும், ஆயுதம் அல்லது மனித பலம் கொண்ட குழு, மற்றவர்களை அடக்கி ஆளுகிறது .இத்தகைய ஒரு சமுதாய பின்னணியிலேயே மனித உரிமைகள் பற்றியும் அதனை பாதுகாக்கும் வழிமுறைகளும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டது .

மனித உரிமைகள் என்ற பதம் ஆரம்பத்தில் பாவனையில் இருக்கவில்லை .
மனித இரக்கம், மனித நேயம் ,மனிதாபிமானம்  போன்ற பதங்களே ஆரம்பத்தில் கையாளப்பட்டது .

இனி நாம் அடுத்த பதிவில் அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது ?மனித உரிமையை இனம்காண மனிதனை தூண்டிய காரணங்களை பார்ப்போம்?

Monday, August 16, 2010

ஓர் அறிமுகம் ......

0 comments
அறிமுகம் ......


மனிதம் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . மனிதநேயத்தின் ஒரு பணியாக ஒவ்வொருவரிடமும் மனிதம் மற்றும் அதன் சட்டங்கள்  சரியான முறையில் அனைவரையும் சென்றடைய எடுக்கும் முதல் முயற்ச்சியாக இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அனைவரும் அடிப்படை உரிமைகள் அடிப்படை சட்டங்கள், உலகை, சூழலை  பாது காக்க வேண்டிய கட்டாயத்தன்மை பற்றி அறிந்திருத்தல் வேண்டும் . சிறு மாற்றமே பெரியதொரு மாற்றத்தை கொண்டு வரும்.   இதற்க்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை.

நம்மில் நம் பூமியில்  நாம் இறைவனை காண்போம்...